13

இந்தியாவின் தேசிய மரம் (National Tree) ஆலமரம் (Banyan Tree) ஆகும்.இதன் தாவரவியல் பெயர் ஃபைகஸ் பெங்கலன்சிஸ்(Ficus bengalensis) என்பதாகும்.ஆலமரம் மிகப் பிரமாண்டமாக வளரக் கூடியது.பல ஆயிரம் ஆண்டுகள்வரை உயிருடன் வாழும்.இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயற்கையாக வளர்கிறது.இமயமலைச் சாரலின் சரிவுகளில் இது காட்டு மரமாக வளர்கிறது.சாலை ஓரங்கள்,ஆலயங்கள்,மேடைக் கோவில்கள் ஆகியவற்றின் அருகில் வளர்க்கப்படுகின்றன.கிராம வாழ்க்கையின் மையமாக ஆலமரம் விளங்குகிறது.ஊர்க்கூட்டங்கள் யாவும் ஆலமரத்தின் நிழலிலேயே நடக்கின்றன.

இம்மரம் நீண்ட வாழ்நாளைக்கொண்ட அழியாத ஒன்றாகக் கருதப்படுகிறது.மேலும் இந்திய புராணங்களிலும்,பழங்கதைகளிலும் ஒன்றிணைந்ததாக விளங்குகிறது.இது தமிழக நாட்டுக் கோவில்களில் தல விருட்சமான மரமாகக் கருதப்படுகிறது.ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டும் எனப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். பறவைகள்,மிருகங்களுக்கும் வாழ்வழிக்கிறது. மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் முக்கிய மரமாக இது விளங்குகிறது.

அலெக்சாண்டர் ஆலமரத்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார்.இவரின் 7000 படைவீரர்கள் ஆலமரத்தின் நிழலில் தங்கி ஓய்வு எடுத்தனர்.தமிழ் உள்பட பல மொழிகளில் ஆலமரத்தைப் பற்றி பாடிய பாடல்கள் பல உள்ளன.நாட்டுப்புறக் கதைகள்முதல் சினிமாக் கதைகள்வரை ஆலமரத்தைச் சுற்றி உருவானவை பல உள்ளன.இது போதி மரம் என புத்தமதத்தினரால் அழைக்கப்படுகிறது.

ஆலமரம்:

ஆலமரம் அத்திக் குடும்பத்தைச் சேர்ந்தது.மிகப் பெரிய வடிவத்தைக் கொண்டது.இது 20 முதல் 35 மீட்டர் உயரம்வரை வளரக் கூடியது.மிகவும் பருத்த அடிமரத்தைக் கொண்டிருக்கும்.அடிமரத்தின் சுற்றளவு 15 மீட்டரும் அதற்கு மேலும் இருக்கும்.மரத்தின் கிளைகளை விழுதுகள் தாங்கி நிற்கும்.விழுதுகள் தூண்போல் காட்சி தருகின்றன,கிளைகளைத் தாங்கி நிற்கும்.விழுதுகளை நாட்டின் ஒற்றுமைக்கு உதாரணமாகக் கூறுகின்றனர்.மிகப் பெரிய மரமானது சூரிய ஒளியைத் தடுக்கும் ஒரு கேடயமாக இருக்கிறது.

ஆலமரம் நன்கு நிழல் தருவதால் இதனைக் கிராமங்களில் நடுகின்றனர்.ஆலமரம் உயர்ந்து வளரும்.இதன் விழுதுகள் தரைக்குள் நுழைந்து வேர்களாக மாறி விடுகின்றன.ஆலமரத்தின் அடிமரம் அழிந்து விட்டாலும் இதன் விழுதுகள் அதனைத் தாங்கிக் கொள்ளும்.விழுதுகள் ஆலமரம் போலவே செயல்படுகின்றன.ஆழமாக வேரூன்றி,விழுதுகளைப் பரப்பி வளரும் மரங்களுள் ஆலமரம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.பல ஆயிரம் உயிர்கள் வாழ இடம் தரும் மரமாக ஆலமரம் விளங்குகிறது.

இந்த மரம் பல ஏக்கர் நிலப்பரப்பு அளவில் விரிந்து படர்ந்து வளரும்.ஒரு மரமே ஒரு காடுபோல காட்சி தரும்.இதன் பழங்களை மனிதர்கள் உண்பதில்லை.இதன் தடித்த இலைகளை ஆடு,மாடுகள் உணவாக உண்கின்றன.இம்மரத்தின் விழுது கட்டை போன்று உறுதியானது.அது கூடாரக் கம்புகள்,வண்டிகளின் ஏறுகாலாகவும் பயன்படுகிறது.ஆலமரப் பட்டை நாட்டு மருத்துவம்,சித்த மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஆலமரத்திலிருந்து கிடைக்கும் பால் ஒட்டும் தன்மை கொண்டது.இது இரப்பராகவும் பயன்படுகிறது.இந்தப் பாலை மூட்டு வலிக்குப் பயன்படுத்துகின்றனர்.பட்டை நீரிழிவு நோயைத் தீர்க்கும்.விழுதுகள் ஈறு நோய்களைப் போக்க வல்லது.ஆலமரத்தின் விழுதுகளின் நுனியில் உள்ள குச்சி போன்ற மெல்லிய பகுதியைப் பல் துலக்கப் பயன்படுத்துகின்றனர்.ஆலமரத்தின் கட்டைகளை காகிதம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.இலை,கனி,பட்டை,பால் என ஆலமரத்தின் அனைத்து பகுதியுமே மருத்துவத்திற்கு பயன்படுகின்றன.

மிகப் பெரிய ஆலமரம்:

ஆலமரத்தின் தாயகம் இந்தியா.இந்தியாவிலிருந்து கொண்டுசென்று அமெரிக்காவிலும் நட்டுள்ளனர்.உலகிலேயே மிகப் பெரிய ஆலமரம் கொல்கத்தாவில் உள்ளது.கொல்கத்தா அருகில் உள்ள கௌரா என்னுமிடத்தில் ஜெகதீஸ் சந்திரபோஸ் இந்தியன் பொட்டானிக்கல் கார்டனில் உலகின் மிகப் பெரிய ஆலமரம் உள்ளது.இதனை கிரேட் பேனியன்(The Great Banyan) என அழைக்கின்றனர்.இம்மரம் கிளைகள் படர்ந்து ஒரு சிறு வனம் போல் காட்சி தருகிறது.இம்மரத்தின் வயது 250 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.19ஆம் நூற்றாண்டில் வெளிவந்த சுற்றுலா புத்தகங்களில் இம்மரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இம்மரம் 1884 மற்றும் 1886 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய புயலால் பாதிக்கப்பட்டது.அப்போது சில முக்கியமான கிளைகள் ஒடிந்தன.அதில் காளான் தொற்று ஏற்பட்டது.இதன் முக்கிய அடிமரம் முழுவதும் இற்றுப் போனது.இது 1925 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.இம்மரத்தில் அதிகப்படியான விழுதுகள் இருப்பதால் மரம் தாங்கி நிற்கிறது.முதன்முதலில் ஆலமரம் முளைத்து வளர்ந்த இம்மரத்தின் ஒரிஜினல் தண்டு தற்போது இல்லை.

மரத்தில் தோன்றிய விழுதுகள்,பெரிய பெரியத் தூண்களாக மாறி மரத்தின் கிளைகளை தாங்கி நிற்கின்றன.பந்தல் போட்டதுபோல் பல விழுதுகளால் மரத்தின் கிளைகளும்,இலைகளும் தாங்கி நிற்கின்றன.இம்மரம் மிகவும் ஆரோக்கியமாகவே உள்ளது.அப்புறப்படுத்தப்பட்ட மரத்தின் சுற்றளவு தரையிலிருந்து 15.7 மீட்டர் உயரத்தில் 1.7 மீட்டர் இருந்தது.

இம்மரம் 14500 சதுர மீட்டர் பரப்பளவில் படர்ந்துள்ளது.அதாவது 4 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.மரத்தின் இலை படர்ந்த மகுடம் ½ கிலோமீட்டர் சுற்றளவிற்கு உள்ளது.உயரமான கிளை 25 மீட்டர் உயரம்வரை உள்ளது.தற்போது 3300 விழுதுகள் மூலம் ஆலமரம் விரிந்து,பரந்து ஒரு காடுபோல காட்சி தருகிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

இந்திய தேசியச் சின்னங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 4.0 Unported License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book